இந்திய பேட்மிண்டன் ராணி சாய்னா நேவால் ஓய்வு! கண்ணீருடன் விடைபெறும் ஒலிம்பிக் பதக்க நாயகி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச மற்றும் போட்டி பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்த 35 வயதான சாய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது முழங்காலில் உள்ள குருத்தெலும்பு (Cartilage) முற்றிலும் தேய்ந்துவிட்டதாகவும், மூட்டுவலி (Arthritis) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "எனது உடல் இனி ஒரு எலைட் வீராங்கனைக்குரிய கடுமையான பயிற்சிகளை தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. என்னால் முன்னரைப் போல ஓடி விளையாட முடியாததால், விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன்," என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
காயம்
உடல்நிலை காரணமாக ஓய்வை அறிவித்தார் சாய்னா
2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஏற்பட்ட காயம் இவரது வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும், அதிலிருந்து மீண்டு வந்து 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும், 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்று அசத்தினார். 2023 சிங்கப்பூர் ஓபன் தொடரே இவரது கடைசிப் போட்டியாக அமைந்தது. முறையான அறிவிப்பு எதற்குமே தேவையில்லை என்று கருதிய சாய்னா, தற்போது தனது உடல்நிலை காரணமாக விளையாட முடியாத சூழலைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் முதன்முதலில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த வீராங்கனை என்ற பெருமையுடன் சாய்னா நேவால் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.