ஹைலோ ஓபன் தங்கம்: சாய் நிதி உதவி நிறுத்தியும் சாதித்த சிந்து மற்றும் லக்சயா சென்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ஹைலோ ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு இரட்டைத் தங்க மகுடத்தைச் சூட்டியுள்ளனர். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் இடையே ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, வீரர்களுக்கான அரசு நிதி உதவி கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்டு, சொந்தச் செலவில் வீரர்கள் போட்டியிட வேண்டிய இக்கட்டான சூழல் நிலவிய போதிலும், களத்தில் சளைக்காமல் போராடி இந்த சாதனையை இந்திய நட்சத்திரங்கள் நிகழ்த்தியிருப்பது விளையாட்டு உலகையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிந்து அதிர்ச்சி
கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட நிதி
பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற நான்கு முக்கிய ஐரோப்பிய தொடர்களுக்கான பயண நிதி மற்றும் செலவுத் தொகையை சாய் அமைப்பு திடீரென நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மனம் திறந்து பேசிய பி.வி. சிந்து, "எனக்கு இந்த விஷயம் தெரிந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது."
"இதற்கு முன் நான் இப்படி ஒரு நிலையை எதிர்கொண்டதே இல்லை. நிதி கிடைக்கவில்லை என்பதற்காக போட்டியில் இருந்து பின்வாங்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்."
"எனக்கு விளையாடுவதும், திறமையை மேம்படுத்துவதுமே முதல் முன்னுரிமை. சொந்த நிதியைப் பயன்படுத்தியும், எனக்கு ஆதரவளிக்கும் 'ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட்' உதவியுடனும் இந்தத் தொடர்களில் பங்கேற்றேன்" என்று பகிர்ந்துள்ளார்.
சாய் அமைப்பின் விளக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் பதக்கங்கள் வெல்லாததன் எதிரொலியாகவே வீரர்களுக்கான நிதி முடக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சாய் அமைப்பின் உயர் அதிகாரி, தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பாகப் பெயர்களுடன் கூடிய திட்ட அறிக்கையை பேட்மிண்டன் சங்கம் சமர்ப்பிக்கத் தவறியதாலேயே நிதி விடுவிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம், கடந்த நான்கு வாரங்களாக வீரர்கள் தங்கள் சொந்த கைக்காசை போட்டுச் செய்த செலவுகள் எதுவும் அவர்களுக்குத் திருப்பித் தரப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கம் இந்தத் தகவலை ஒரு சாதாரண வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வீரர்களுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக்கொண்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
பயிற்சியாளர்கள் இன்றிப் போராடிய இளம் வீரர்கள்
நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பல இளம் வீரர்கள் தங்களது பயிற்சியாளர்களைக் கூட அழைத்துச் செல்ல முடியாமல் தவித்தனர்.
தங்களின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளையே வீரர்கள் சொந்தமாகச் சுமக்க வேண்டியிருந்ததால் பயிற்சியாளர்களின் செலவை ஏற்க முடியவில்லை.
பிரெஞ்சு ஓபனில் அஸ்மிதா சாலிஹா சக வீராங்கனை இஷாராணியின் உதவியுடன் களமிறங்கி முன்னணி வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார்.
டென்மார்க் காலிறுதி வரை முன்னேறிய இளம் வீராங்கனை தன்வி சர்மாவும் பயிற்சியாளர் துணையின்றித் தனியாகவே களத்தில் நின்று போராடினார்.
இத்தகைய கடுமையான சவால்களையும் தாண்டி, நாட்டிற்காக தங்களது சொந்த செலவில் விளையாடி தங்கப் பதக்கம் வென்று இந்தியக் கொடியை உலக அரங்கில் வீசிப் பறக்கவிட்டுள்ளனர் சிந்துவும் லக்சயா சென்னும்.