ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஐபிஎல் 2023 இல் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் செய்தார். இருவரும் ஜூன் 3 அன்று திருமணம் செய்த நிலையில், திங்களன்று (ஜூன் 12) தனது நிச்சயதார்த்தத்தின் சில படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது திருமணத்திற்காக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதையும் ருதுராஜ் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பதிவில் தங்களது நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்டின் இன்ஸ்டாகிராம் பதிவு
புகைப்படங்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், உத்கர்ஷாவுக்கு என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக சென்னை நகரம் இருப்பது பற்றி சரியாகத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், "சென்னை நகரத்தின் முக்கியத்துவம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என் வாழ்க்கையில் கொடுத்த நன்மைகள் பல. எனவே எங்கள் முழு பாரம்பரிய மகாராஷ்டிர நிச்சயதார்த்தத்தையும் சென்னை மக்கள் மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்க உத்கர்ஷா முடிவு செய்தார். உண்மையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறியது. நான் உன்னை நேசிக்கிறேன்." என்று அவர் மேலும் கூறினார். உத்கர்ஷாவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மாநில அணிக்காக விளையாடி உள்ளார்.