யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ
யூரோ கால்பந்து கோப்பை 2024க்கான தகுதிச் சுற்று போட்டியில் குழு ஜே'வில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்ததால் போர்ச்சுகல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோ தற்போது தனது 197வது ஆடவர் சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய சாதனை படைத்துள்ளார். ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதிலிருந்து தற்போதுவரை ஆண்கள் சர்வதேச கால்பந்தில் 120 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய குவைத்தின் முன்கள வீரர் படேர் அல்-முதாவாவை (196 போட்டிகளில்) பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ முதலிடம் பிடித்தார். முன்னதாக கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பையில் படேரின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் 100 போட்டி கோல்களை அடித்த முதல் வீரர் ரொனால்டோ
ஸ்குவாக்காவின் கூற்றுப்படி, ஆடவர் சர்வதேச கால்பந்தில் 100 போட்டி கோல்களை அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார். கடந்த 20 ஆண்டுகளில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ அனைத்து ஆண்டுகளும் கோல் அடித்துள்ளார். இந்த 20 ஆண்டுகளில் ஐந்து முறை ஒரு வருடத்தில் 10-க்கும் மேற்பட்ட கோல்களை அவர் அடித்துள்ளார். மேலும் 120 கோல்களுடன் ரொனால்டோ லியோனல் மெஸ்ஸியை (98) விட 22 கோல்கள் அதிகமாக அடித்துள்ளார். ரொனால்டோ ஆடவர் சர்வதேச கால்பந்தில் 10 ஹாட்ரிக் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு கத்தாரில், ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.