
இந்தியா vs இலங்கை முதல் ODI : லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தார் ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார்.
லிஸ்ட் ஏ வடிவத்தில் தனது 334வது போட்டியில் விளையாடிய ரோஹித், 46-க்கும் அதிகமான சராசரியுடன் 13,009 ரன்களை எட்டியுள்ளார். இந்த எண்ணிக்கையில் 34 சதங்களும் 69 அரைசதங்களும் அடங்கும்.
இதற்கிடையே, ஒருநாள் போட்டியில் ரோஹித் 49.16 சராசரியில் 10,767 ரன்களை எடுத்துள்ளார். இதில் 31 சதங்கள் மற்றும் 56 அரைசதங்கள் அடங்கும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள மூன்று இரட்டை சதங்களில் இரண்டு இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது இந்தியர்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது இந்திய வீரர்
இந்த போட்டியில் அடித்த பவுண்டரிகள் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 (இப்போது 1,001) பவுண்டரிகளை கடந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (2,016), விராட் கோலி (1,290), வீரேந்திர சேவாக் (1,132), மற்றும் சவுரவ் கங்குலி (1,122) ஆகியோர் ரோஹித் ஷர்மாவை விட முன்னிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிவேகமாக 15,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் 331 இன்னிங்ஸ்களுடன் உள்ள நிலையில், ரோஹித் 352 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.