பும்ராவின் இடத்தை நிரப்பிய முகமது சிராஜ்; ரோஹித் ஷர்மா பாராட்டு மழை
குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தாலும், தனது அணியின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்தார். முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களுடன் களத்தில் இருந்தது. அப்போது வெஸ்ட் இன்டீஸின் வெற்றிக்கு 289 ரன்கள் தேவையாக இருந்தது. இருப்பினும், கடைசி நாளில் (ஜூலை 24) இடைவிடாத மழைக்கு மத்தியில் ஒரு பந்து கூட வீச முடியாமல் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
முகமது சிராஜின் பந்துவீச்சை பாராட்டிய ரோஹித் ஷர்மா
இரண்டாவது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் சதம், ரோஹித்துக்கு தனது டெஸ்ட் வாழ்க்கையில் அதிவேக அரைசதம், இஷான் கிஷான் முதல் அரைசதம் என பேட்டிங்கில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், பந்துவீச்சில் முகமது சிராஜ் அபாரமாக செயல்பட்டார். போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, "சிராஜை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நேரத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்." என்று கூறினார். மேலும் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சை முகமது சிராஜ் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.