21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார். டிரினிடாட்டில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் ரோஹித் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பாக, 21 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனா 29 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ஸ்கோரைப் பெற்றதே சாதனையாக இருந்து வந்த நிலையில், அதை ரோஹித் முறியடித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்கள் பின்வருமாறு:- 12,161,26,66,25*,49,34,30,36,12*,83,21,19,59,11,127,29,15,46,120,32,31,12,12,35,15,43,103,80,57.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் அதிவேக அரைசதம்
இரண்டாவது இன்னிங்சில் 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா 35வது பந்தில் 50 ரன்களை எட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக, 2021 இல் சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 50 ரன்களை எட்டியதே அவரது அதிவேக அரைசதமாக இருந்தது. இதற்கிடையே, ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்து, வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு அதிக ரன்களை குவித்துள்ளனர். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து 466 ரன்கள் சேர்த்தனர்.