உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து
செய்தி முன்னோட்டம்
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.
நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்திலும் மழையின் காரணமாக இரண்டு முறை போட்டி தடைபட்டு 23 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பந்துவீச்சில் சற்று சொதப்பினாலும், விக்கெட் இழப்பின்றி சுலபமாகப் போட்டியை வென்றது இந்தியா.
நேற்றைய போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கடந்த இரு போட்டிகள் குறித்தும், உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வு குறித்தும் பேசியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.
கிரிக்கெட்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ரோகித் ஷர்மா கூறியது என்ன?
"ஆசிய கோப்பைத் தொடருக்கு வரும்போதே, உலக கோப்பைக்கான அணி எப்படி இருக்கும் என்று கிட்டத்தட்ட தெரிந்திருந்தது. ஒன்றிரண்டு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களுக்கான வீரர்களின் தேர்வு குறித்தும் தெரிந்திருந்தது.
நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகள் குறித்து அதிகம் சிந்திக்க நேரமில்லை. எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நாங்கள் ஆடவில்லை. பீல்டிங்கை இன்னும் நிறையவே மேம்படுத்த வேண்டியிருக்கிறது." எனத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரோகித் ஷர்மா.
2013ம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் இந்தியா வெல்லவில்லை. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பைத் தொடர் இந்தியாவிற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அக்டோபர்-5ம் தேதி தொடங்கும் உலக கோப்பைத் தொடரில், அக்டோபர்-8ம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.