பிரதமர் மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய ரிங்கு சிங்: டிசம்பர் 4-ல் பிரியா சரோஜுடன் திருமணம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜ் உடனான தனது திருமணத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றுள்ளார். வரும் டிசம்பர் 4-ஆம் தேதி லக்னோவில் உள்ள ரமடா (Ramada) நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், ரிங்கு சிங் தனது குடும்பத்தினருடன் சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரிங்கு சிங், "எனது குடும்பத்தினருடன் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துத் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து ஆசி பெற்றதில் பெருமை கொள்கிறேன். இது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
லக்னோவில் திருமண ஏற்பாடுகள்
முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் அழைப்பு
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி லக்னோவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ரிங்கு சிங் மற்றும் மச்லிஷஹர் தொகுதி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் இரு வீட்டார் தரப்பிலும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகின் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக ரிங்கு சிங்கின் தாயார் பீனா தேவி, சகோதரர் சோனு சிங் மற்றும் சகோதரி நேஹா சிங் ஆகியோர் லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆசியக் கோப்பை
சமூக வலைதளத்தில் தொடங்கிய காதல்
கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றபோது, சமூக வலைதளப் பக்கத்தில் பிரியா சரோஜின் புகைப்படத்தைப் பார்த்துக் காதல் வயப்பட்டதாக ரிங்கு சிங் ஏற்கனவே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
பிரியா தனது புகைப்படங்களுக்கு லைக் செய்ததைத் தொடர்ந்து ரிங்கு அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகத் தொடங்கிய இவர்களது நட்பு, 2022-ஆம் ஆண்டில் காதலாக மலர்ந்தது.
திருமணத்திற்கு முன்னதாக, வரும் நவம்பர் 19 முதல் 29 வரை தோஹாவில் நடைபெறவுள்ள ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை (ACC Rising Stars Asia Cup) தொடரில், இந்தியா ஏ அணியின் துணைக் கேப்டனாக ரிங்கு சிங் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.