ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு 2 ஆண்டுகள் தடை
செய்தி முன்னோட்டம்
ஓய்வுபெற்ற பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் அமீர் கான் தனது கடைசி தொழில்முறை போட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் லைட்-வெல்டர்வெயிட் உலக சாம்பியனும், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமீர் கான், பிப்ரவரி 2022 இல் மான்செஸ்டரில் கெல் புரூக்குடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தார்.
இந்த போட்டியின்போது அவரிடம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ஆஸ்டரைன் எனும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
பிரிட்டன் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 4) அன்று இதை உறுதி செய்துள்ளது.
அமீர் கான்
2024 வரை அமீர் கானுக்கு தடை
கெல் புரூக்குடனான போட்டிக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அமீர் கான், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதை வேண்டுமென்றே உட்கொள்ளவில்லை என்று கூறினார். ஜனவரி மாதம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து சுயேட்சையான விசாரணைக் குழுவால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தடை ஏப்ரல் 5, 2024 வரை அமலில் இருக்கும்.
தனது காலத்தில் சிறந்த பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான அமீர் கான் 2003 ஜூனியர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பேன்றவர் ஆவார்.
வெறும் 17 வயதில் குத்துச்சண்டையை தொடங்கிய அமீர்கானுக்கு இது சோகமான முடிவு தான்.