பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார். இதன் மூலம், பிரீமியர் லீக் தொடரில் போட்டி நடுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றார். வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள வாஷிங்டனைச் சேர்ந்த 40 வயதான வெல்ச், 2010இல் நடுவர் பணியைத் தொடங்கினார். அதற்கு முன்னர் தேசிய சுகாதார சேவையில் பணிபுரிந்த அவர், நடுவராக அதிகாரப்பூர்வ தரவரிசையில் வேகமாக முன்னேறினார். மேலும் 2021இல், ஹாரோகேட் மற்றும் போர்ட் வேல் இடையேயான நான்காவது-அடுக்கு போட்டிக்கு அவர் பொறுப்பேற்றபோது, பிரீமியர் லீக்கில் ஒரு போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனது குறிப்பிடத்தக்கது.