
ஐபிஎல் வெற்றி விழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி; ஆர்சிபி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்சிபி அணி அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த பிறகு, ஆர்சிபி அணி 84 நாட்களுக்கு எந்தவித சமூக வலைதளப் பதிவுகளையும் வெளியிடவில்லை. தற்போது, இந்த நிதியுதவியை அறிவித்ததோடு, 'ஆர்சிபி கேர்ஸ்' என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஆர்சிபி வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயம் உடைந்தது. ஆர்சிபி குடும்பத்தின் 11 உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம்." எனக் கூறியது.
தொடக்கம்
இது வெறும் தொடக்கம் தான்
ஆர்சிபி தனது அறிக்கையில் மேலும், "அவர்கள் எங்கள் நகரத்திற்கும், சமூகத்திற்கும், அணிக்கும் தனித்துவமானவர்கள். அவர்களின் இழப்பு எங்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் எதிரொலிக்கும். எந்த ஒரு நிதியுதவியும் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால், முதல் படியாக, மிகுந்த மரியாதையுடன், ஆர்சிபி அவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. இது வெறும் நிதியுதவி மட்டுமல்ல, இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான கவனிப்பின் வாக்குறுதியாகும்" என்று தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில், ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும், ஆதரவை வழங்குவதற்கும் 'ஆர்சிபி கேர்ஸ்' என்ற திட்டம் முழுமையாகச் செயல்படும் என ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவி தொடக்கம்தான் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அணி குறிப்பிட்டுள்ளது.