'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக்
இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. இந்நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்கலாம் என தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். "அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற முறையிலும், அதிக மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டங்களை வென்றவர் என்ற முறையிலும், ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்திய அணியை வழிநடத்த அனைத்து தகுதிகளையும் உடையவர் அஷ்வின்" எனத் தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும்?
இந்தியாவிற்காக 270 சர்வதேச போட்டிகளில் களமிறங்கியிருக்கும் அஷ்வின் அனைத்து ஃபார்மெட்களிலும் சேர்த்து 697 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும் 24.21 என்ற சராசரியில் 5 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன், 4,020 ரன்களையும் குவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். மற்ற இரு ஃபார்மெட்களையும் விட டெஸ்ட் போட்டிகளில் தான் மிகவும் வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார் அஷ்வின். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஷிகர் தவான தலைமையிலான அணியையே பிசிசிஐ அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விவிஎஸ் லக்ஷ்மனே இந்த அணியின் பயிற்சியாளராக அனுப்பப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக இன்னும் யாரையும் தேர்ந்தெடுக்காத நிலையில், விரைவில் அது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.