'இப்படி ஆயிடுச்சே குமாரு' ; ஒருநாள் உலகக்கோப்பையில் சோகமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்கள்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் உசாமா மிர் மோசமான சாதனை படைத்துள்ளனர். முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச உள்ளதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 50 ஓவர்கள் முடிவில் 367 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் உசாமா மிர் தனது அறிமுக போட்டியில் வேதனையை பரிசாக பெற்றுள்ளார்.
உசாமா மிருக்கு மறக்க முடியாத உலகக் கோப்பை அறிமுகம்
உசாமா மிர் பந்துவீச வருவதற்கு முன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னரின் கேட்சை தவறவிட்டு சொதப்பலுடனேயே தொடங்கி இருந்தார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக அடித்து நொறுக்க ஆரம்பித்தபோது களமிறக்கப்பட்ட உசாமா மிர் வீசிய பந்து எடுபடவில்லை. ஸ்டீவ் ஸ்மித்தை அவர் ஆட்டமிழக்கச் செய்தாலும், தனது ஒன்பது ஓவர்களில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து, உலகக்கோப்பையில் அறிமுகப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சோகமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர், 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷாஹீன் அப்ரிடி 70 ரன்களை விட்டுக்கொடுத்ததே முந்தைய மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ரவூபுக்கு சோதனை மேல் சோதனை
ஹாரிஸ் ரவூப் வீசிய முதல் ஓவரையே டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் அடித்து நொறுக்கி 24 ரன்களை விளாசினர். அதன் பிறகும் அடுத்தடுத்த சில ஓவர்களில் லைன் மற்றும் லென்த் சரியாக வீசாததால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் ரன்களை வாரிக்குவித்த நிலையில், பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது வேகத்தை மாற்றியமைத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 8 ஓவர்களை வீசிய அவர் 83 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஆனார். 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிராக 84 ரன்களை விட்டுக்கொடுத்த ஹசன் அலி இதில் முதலிடத்தில் உள்ளார்.