ரஞ்சி கோப்பை 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால் அணி!
2022-23 ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணி ஜார்கண்ட் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜார்க்கண்ட் ஆரம்பம் முதல் இறுதி வரை பெங்கால் அணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், போட்டி முழுவதும் பெங்கால் அணியின் ஆதிக்கம் நீடித்தது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் பெங்கால் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக ஜொலித்தார். பெங்கால் அணியின் அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் அகமது மற்றும் சுதீப் கராமி ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர்.
பெங்கால் vs ஜார்க்கண்ட் : போட்டியின் முக்கிய புள்ளிவிவரங்கள்
பெங்கால் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்காலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 173 ரன்களுக்கு சுருண்டது. குமார் சுராஜ் மட்டும் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். பெங்கால் அணியின் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த பெங்கால் அணி ஈஸ்வரன் (77), கராமி (68), ஷாபாஸ் அகமது (82) ஆகியோரின் அரை சதங்கள் மூலம் 328 ரன்கள் குவித்தது. பெங்கால் 155 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற பிறகு, ஜார்கண்ட் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 221 ரன்களுக்குச் சுருட்டியது. இதையடுத்து 67 ரன்களை எளிதாக சேஸ் செய்து பெங்கால், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.