வெளிநாடு போகும் முன் இதை மறக்காதீங்க! இளம் இந்தியர்கள் தவிர்க்கக் கூடாத மெனிங்கோகோக்கல் தடுப்பூசி
செய்தி முன்னோட்டம்
வெளிநாட்டு பயணத் திட்டங்களில் விசா மற்றும் விமானப் பயண சீட்டுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை, பலரும் ஆரோக்கிய பாதுகாப்பிற்குத் தருவதில்லை. குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் இளம் இந்தியர்கள், மெனிங்கோகோக்கல் தடுப்பூசியைப் பற்றி பல நேரங்களில் கேட்க மறந்துவிடுகின்றனர். அத்தியாவசியமான இந்த தடுப்பூசியைத் தவிர்க்கும்போது, தீவிர பாக்டீரியா தொற்றுகளுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
மூளைக்காய்ச்சல்
மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?
மெனிஞ்சைடிஸ் என்பது மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வுகளில் ஏற்படும் ஆபத்தான வீக்கத்தைக் குறிக்கிறது.
நீசேரியா மெனிஞ்சிடிடிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படும் இத்தொற்று, மிக விரைவாக உடல்நலத்தைப் பாதிக்கும் தன்மையுடையது.
திடீரென ஏற்படும் கடும் காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, வாந்தி மற்றும் கழுத்து விரைப்பு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் தாமதிக்காமல் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியமாகும்.
தடுப்பூசி
யாரெல்லாம் இத்தடுப்பூசியைப் போட வேண்டும்?
வெளிநாடுகளுக்கு சென்று விடுதிகளிலோ அல்லது பகிரப்பட்ட அறைகளிலோ தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இத்தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இடங்களில் தங்குபவர்கள் மற்றும் நீண்ட காலம் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இத்தடுப்பூசியைப் பெற வேண்டும்.
மேலும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்கள் மற்றும் நோய்த்தொற்று அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்வோரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு நபரின் பயண சூழலுக்கு ஏற்ப தடுப்பூசித் தேவைகள் மாறுபடும்.
பாதுகாப்பு முறைகள்
பயணத்திற்கு முன்பே செய்ய வேண்டிய பாதுகாப்பு முறைகள்
தொடக்கத்தில் சாதாரண காய்ச்சல் போலத் தோன்றும் இத்தொற்று, பின்னர் தீவிரமடைந்து உடலில் ஊதா நிறத் தழும்புகளையும் வலிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, வெளிநாடு கிளம்புவதற்கு முன்பே மருத்துவரை சந்தித்து தடுப்பூசி விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சோப்பு போட்டு அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
வெளிநாட்டு பயண பட்டியலில் இத்தடுப்பூசி குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.