
ஐபிஎல் 2025: போராடி தோற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.
இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும்.
இஷான் கிஷன் 106 ரன்களும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துஷார் தேஸ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கடைசிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ்
287 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், சஞ்சு சாம்சன் (66 ரன்கள்) மற்றும் துருவ் ஜுரேல் (70 ரன்கள்) கடுமையாக போராடி அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு வழிநடத்தினர்.
எனினும், 14வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் பின்னடைவை சந்தித்தது.
பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர் (42 ரன்கள்) மற்றும் ஷுபம் துபே (34 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன் குவித்தாலும், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.