ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவாக சரிந்தது. 14.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அணியை மீட்டெடுத்தது. இஷான் கிஷன் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் மீண்டு வந்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.
ஷாஹீன் அப்ரிடி மிரட்டல் பந்துவீச்சு
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, பவர்பிளேயில் ஷாஹீன் அப்ரிடி இந்திய அணியை பந்தாடினார். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு இந்திய பேட்டர்களையும் போல்ட் ஆக்கி வெளியேற்றியதோடு, மேலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். இதேபோல், நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவுஃப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இரண்டு முறை மழை குறுக்கிட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆடப்பட்டது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் மழை நிற்காமல் வெளுத்துவாங்க தொடங்கியதை அடுத்து, பாகிஸ்தானால் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க முடியவில்லை. இதனால், போட்டி ரத்து செய்யப்பட்டு, புள்ளிங்கள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.