மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட்! கில் கிறிஸ்ட், மோர்கனும் நோ;அடுத்த கோச் யார்?
செய்தி முன்னோட்டம்
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மகேலா ஜெயவர்த்தனே விலகியுள்ளதைத் தொடர்ந்து, அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரங்களில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இப்பொறுப்பை ஏற்பார் எனப் பலத்த யூகங்கள் கிளம்பிய நிலையில், அவர் இந்தப் பந்தயத்தில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டிராவிட் மறுப்பு
டிராவிட், கில்கிறிஸ்ட், மோர்கன் மறுப்பு
தனது குடும்பம் மற்றும் மகன்களான சமித், அன்வே ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காகவே டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகிய பிறகு அவருக்குப் பல ஐபிஎல் வாய்ப்புகள் வந்தபோதிலும், அடுத்த சீசனில் எந்தவொரு அணியிலும் பொறுப்பேற்காமல் ஒதுங்கியிருக்கவே அவர் முடிவு செய்துள்ளார்.
அதேபோல், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இங்கிலாந்தின் இயான் மோர்கன் ஆகியோரும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ரேஸில் இல்லை என்பதை நிர்வாகங்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டனர்.
பிற பயிற்சியாளர்கள்
ரேஸில் மைக் ஹஸ்ஸி
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அண்மையில் வெளியேறிய மைக் ஹஸ்ஸி, ஐபிஎல் அணிகளுடன் பேசி வருவதாகவும், மும்பை அணியின் பரிசீலனையில் அவர் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், தென்னாப்பிரிக்காவின் எஸ்.ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மூன்று முறை சாம்பியன் ஆக்கிய அட்ரியன் பிரெல் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோரும் சில ஐபிஎல் அணிகளின் ரேடாரில் உள்ளனர்.
கிரன் பொல்லார்ட், லசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே ஆகியோரைத் தக்கவைப்பதா என்பதைப் புதிதாக வரும் பயிற்சியாளரே முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேர்காணல் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.