மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெறுவதற்கான விளிம்பில் உள்ள வைஷாலி FIDE மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 10வது மற்றும் இறுதிச் சுற்றின் முடிவில் சீனாவின் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான ஜோங்கியி டானை பின்னுக்குத் தள்ளி மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றார். வைஷாலியின் தம்பியான பிரக்ஞானந்தாவும் ஆடவர் பிரிவில் தகுதி பெற்ற நிலையில், இந்த போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக ஆனார்கள். மேலும், அவர்கள் கேண்டிடேட்ஸ் பிரிவில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு கனடாவில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறுவார்கள்.
கிராண்ட்மாஸ்டர் ஆக 2 புள்ளிகள் மட்டுமே தேவை
லைவ் ரேட்டிங்கில் 2498 புள்ளிகளுடன் உள்ள வைஷாலி, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே குறைவாகவே உள்ளார். அவர் கூடுதலாக இரண்டு புள்ளிகளை பெறும்போது, அவரும் பிரக்ஞானந்தாவும் இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்ற பெருமையைப் பெறுவார்கள். இதற்கிடையே ஆடவர் கிராண்ட் பிரிக்ஸ் திறந்த பிரிவில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தியும் சிறப்பாக செயல்பட்டு ருமேனியாவின் டீக் போக்டன்-டேனியலை வீழ்த்தினார். 4,60,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இந்த நிகழ்வில் இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில், அர்ஜுன் எரிகைசியும் நான்காவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் தகுதி பெற நகமுராவுக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.