கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு மற்றும் தனிப்பட்ட இலக்குகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தாலும், தனக்கு சாதனைகளை துரத்துவதை விட விளையாட்டை ரசிப்பதில்தான் கவனம் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்து பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக என மொத்தம் ஐந்து உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்து விளையாட உள்ள நிலையில், இந்தியாவுக்காக அவர் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்.
அஸ்வினின் கிரிக்கெட் அணுகுமுறை
2016 ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்ட அஸ்வின், தனக்கு குறிப்பிட்ட இலக்குகள் எதுவும் மனதில் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் தனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் விமல் குமாருடன் கலந்துரையாடுகையில், "நான் ஓய்வு குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால் இன்று நான் முன்னேற விரும்பவில்லை என்று நான் நினைக்கும் நாளில், நான் வெளியேறுவேன்" என்று கூறினார். அனில் கும்ப்ளேவின் 619 டெஸ்ட் விக்கெட்டுகளின் சாதனையை முறியடிப்பேன் என்று கூறப்பட்டாலும், அவ்வாறு தனக்கு எந்தவித இலக்கும் இல்லை என அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.