யுஎஸ் ஓபன் : மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
யுஎஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திஷா குப்தாவை தோற்கடித்தார். மொத்தம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், பிவி சிந்து 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் திஷா குப்தாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தரநிலையில் 61வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை ருத்விகா ஷிவானி முதல் சுற்றில் 14-21, 11-21 என்ற செட் கணக்கில் சீன-தைபேயின் லின் சியாங் டியிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் பிரிவில் லக்ஷ்யா சென், சங்கர் சுப்ரமணியன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி
ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் ஃபின்லாந்தின் காலே கோல்ஜோனனை எதிர்த்து யுஎஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். லக்ஷ்யா சென் 21-8, 21-16 என்ற செட் கணக்கில் தனது ஃபின்னிஷ் எதிராளியை 30 நிமிடங்களுக்குள் தோற்கடித்தார். மற்றொரு ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், இரண்டு கடினமான தகுதிப் போட்டிகளுக்குப் பிறகு போட்டியின் பிரதான டிராவிற்குள் நுழைந்த எஸ்.சங்கர் சுப்ரமணியன், முதல் சுற்றில் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த நாட் நுயனை 21-11, 21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இருப்பினும், பி சாய் பிரனீத் 23 வயதான உலகின் 7ஆம் நிலை சீன வீராங்கனை லி ஷி ஃபெங்கிடம் போராடி தோல்வியைத் தழுவினார்.