புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கபடி போட்டிகளில் ஒன்றான புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான ஏலம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என போட்டியின் ஏற்பாட்டாளர் மஷால் ஸ்போர்ட்ஸ் திங்கள்கிழமை (ஜூலை 3) அறிவித்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் சீசன் 9 அணியில் இருந்து ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இந்த வீரர்கள் 'எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்' என வகைப்படுத்தப்படுவார்கள். தக்கவைக்கப்படாத வீரர்கள் ஏலக் குழுவிற்குச் சென்று, இரண்டு நாள் ஏலத்தின்போது மற்ற 11 அணிகளுக்கும் கிடைக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பிரிவு ஏ, பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள்.
புரோ கபடி லீக் ஏலத்தில் அடிப்படை விலை
புரோ கபடி லீக் ஏலத்தில் வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஆல்-ரவுண்டர்கள், டிஃபெண்டர்கள் மற்றும் ரைடர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். இதில் பிரிவு ஏ'வில் உள்ள வீரர்களுக்கு ₹30 லட்சம், பிரிவு பி'யில் உள்ள வீரர்களுக்கு ₹20 லட்சம், பிரிவு சி'யில் உள்ள வீரர்களுக்கு ₹13 லட்சம் மற்றும் பிரிவு டி'யில் உள்ள வீரர்களுக்கு ₹9 லட்சம் ஆகியவை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பார்கள். மேலும் இதில் முதல்முறையாக கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸின் இரண்டு இறுதி அணிகளைச் சேர்ந்த 24 வீரர்களும் இடம்பெற உள்ளனர். மேலும், 12 உரிமையாளர்கள் ஒவ்வொன்றின் மொத்த சம்பள பர்ஸும் தற்போதுள்ள ₹4.4 கோடியிலிருந்து ₹5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.