முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் விலகல்
முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா மூன்று மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காயத்தால் அவர் வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனின் பெரும்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளார். இந்தியாவில் 2023-24 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் அக்டோபர் 1 முதல் ராஜ்கோட்டில் இரானி கோப்பையுடன் தொடங்க உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் நார்தாம்ப்டன்ஷையருடன் ஒருநாள் கோப்பையில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த காயம் தீவிரமானதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்கேன் எடுத்து பார்க்கையில், இது மிகவும் தீவிரமடைந்துள்ளது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள ப்ரித்வி ஷா
காயத்தின் தீவிரத்தன்மை குறித்து ப்ரித்வி ஷா லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பியுள்ளார். தற்போது அவரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவக் குழு பரிசோதித்து வருகிறது. நிச்சயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அவரது காயத்தை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், 2024 ஜனவரியில் தொடங்கவிருக்கும் ரஞ்சிக் கோப்பைக்கு முன்னதாக, அவரை முழு தயார் நிலைக்கு கொண்டுவர மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாக நடக்கும் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் அவர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.