சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஜோடி
செய்தி முன்னோட்டம்
எஸ்எல்3-எஸ்எல்4 ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் பிரிவில் உலகின் நம்பர் 1 ஜோடியான பிரமோத் பகத் மற்றும் சுகந்த் கடம் நான்கு நாடுகள் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் தங்கம் வென்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரமோத் மற்றும் சுகந்த் ஜோடி சக இந்திய ஜோடியான தீப் ரஞ்சன் பிசோயி மற்றும் மனோஜ் சர்கார் ஜோடியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது.
30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரமோத் மற்றும் சுகந்த் ஜோடி 21-17 மற்றும் 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினர்.
பிரமோத் மற்றும் சுகந்த் ஜோடியிடம் தோல்வியைத் தழுவிய தீப் ரஞ்சன் பிசோயி மற்றும் மனோஜ் சர்கார் ஜோடி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
indian para shutler won gold
ஒற்றையர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி தங்கம் வென்ற பிரமோத் பகத்
ஒற்றையர் பிரிவு எஸ்எல்3 பிரிவு இறுதிப்போட்டியில் பிரமோத் பகத் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார்.
போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரமோத் பகத் 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், மனிஷா ராம்தாஸ் ஜோடி, இந்தோனேஷியாவின் ஹிக்மத் ராம்தானி, லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடியிடம் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடி 17-21, 17-21 என தோல்வியைத் தழுவி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
மறுபுறம், சுகந்த் கடம் அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஃப்ரெடி செட்டியவானிடம் போராடி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.