ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புரோ கபடி லீக்கின் ஏற்பாட்டாளர்களான மஷால் ஸ்போர்ட்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருவதால், அமெச்சூர் கபடி கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பேரில் ஏலத்தை ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) அறிவித்தது. முன்னதாக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய கபடிக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மஷால் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
புதிய வீரர்கள் ஏலம் எப்போது?
ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை நடத்துவதற்கான புதிய தேதி உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இது குறித்து மஷால் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகள் மற்றும் இந்த கபடி போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் கலந்தாலோசித்து புதிய ஏல தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சீசன் 10க்காக மொத்தம் 84 வீரர்கள் 12 அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்