புரோ கபடி லீக் 2023-24 : தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) அகமதாபாத்தில் நடைபெறும் புரோ கபடி லீக் (பிகேஎல்) 10வது சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லியை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இது இரு அணிகளுக்கும் 10வது சீசனின் முதல் போட்டியாகும். பிகேஎல் 10 பட்டத்தை வெல்வதற்கான முனைப்புடன், இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. புரோ கபடி லீக்கில் இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம், தபாங் டெல்லி 5 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இரண்டு போட்டிகள் டையில் முடிந்துள்ளன.
தமிழ் தலைவாஸ் அணியின் செயல்திறன்
சுவாரஸ்யமாக, தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் கடைசியாக நேருக்கு நேர் மோதிய மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை, ஐந்தாவது லீக்கில் தான் அறிமுகமானது. அவர்கள் லீக்கில் மிகவும் கடினமான நேரத்தைக் கொண்டிருந்தனர் மற்றும் தங்களின் முதல் மூன்று சீசன்களில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்து பரிதாபமாக தோற்றது. 2021 ஆம் ஆண்டில், சற்று முன்னேறி கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தை பிடித்தது. அதன் பின்னர் பயிற்சியாளர் அஷன் குமாரின் கீழ் தனது திறனை மேம்படுத்திய தலைவாஸ் அணி, கடந்த சீசனில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி, அரையிறுதி வரை சென்றது.
தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி : எதிர்பார்க்கப்படும் தொடக்க 7
சாஹல் மற்றும் சாகர் தமிழ் தலைவாஸ் அணிக்கு டிஃபெண்டிங் செய்வார்கள். ஹிமான்ஷு மற்றும் அபிஷேக் ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள். நரேந்தர் ஹோஷியார் மற்றும் அஜிங்க்யா பவார் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணிக்கான ரைடர்களை கவனித்துக் கொள்வார்கள். மறுபுறம் டெல்லி அணியில் விஷால் பரத்வாஜ் மற்றும் சுனில் டிஃபெண்டிங் செய்வார்கள். நவீன்குமார் மற்றும் மஞ்சீத் ஆகியோர் ரைடர்களை கவனித்துக்கொள்வார்கள். தமிழ் தலைவாஸ் (எதிர்பார்க்கப்படும் தொடக்க 7) : சாஹில், சாகர்( கேப்டன்), மோஹித், ஹிமான்ஷு, எம்.அபிஷேக், அஜிங்க்யா பவார், நரேந்தர் ஹோஷியார். தபாங் டெல்லி (எதிர்பார்க்கப்படும் தொடக்க 7) : விஷால் பரத்வாஜ், சுனில், ஆஷிஷ், அஷு மாலிக், மீது மெஹேந்தர் சர்மா, மஞ்சீத், நவீன்-குமார்(கேப்டன்).
போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் ஒளிபரப்பு விபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள ஈகேஏ அரங்கில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியிலும், டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் போட்டியை நேரலையில் காணலாம். அணி வீரர்களின் முழு பட்டியல் : தமிழ் தலைவாஸ் : அஜிங்க்யா, ஹிமான்ஷு சிங், செல்வமணி, மாசானமுத்து லக்ஷ்ணன், சதீஷ் கண்ணன், ஜதின், சாகர், ஹிமான்ஷு, அபிஷேக், சாஹில் குலியா, மோஹித், ஆஷிஷ், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமதுரேசா கபௌத்ரஹங்கி, ரித்திக். டெல்லி தபாங் : அஷு மாலிக், நவீன்குமார், ஆஷிஷ் நர்வால், சூரஜ் பன்வார், மன்ஜீத், மீடு, மனு, விஜய், விஷால் பரத்வாஜ், சுனில், நிதின் சண்டல், பாலாசாகேப் ஷாஹாஜி ஜாதவ், பெலிக்ஸ், யுவராஜ் பாண்டேயா, மோஹித், விக்ராந்த், ஆஷிஷ், ஹிம்மத் அன்டில், யோகேஷ், ஆகாஷ் பிரஷர்.