ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது உறவினர் வைபவ் பாண்டியா கைது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர். இந்த கைது, நிதி முறைகேடு தொடர்பான உயர்மட்ட வழக்கின் ஒரு பகுதியாகும். வைபவ், ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகிய மூவரும் பார்ட்னெர்ஷிப் கம்பெனி ஒன்றை நிறுவியதில், வைபவ் ₹4.3 கோடி (தோராயமாக $530,000 USD) மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பார்ட்னர்ஷிப்பில் இருந்து வைபவ் நிதியை திருப்பிவிட்டதால், ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியாவுக்கு கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் வைபவ் பாண்டியா மீது நிதியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தை மீறுதல் என்ற பிரிவின் கீழ் புகாரளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார் வைபவ்
பாண்டியா சகோதரர்கள் மூவரும் இணைந்து பாலிமர் தொழிலை ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால், ஒவ்வொருவரும் மூலதனத்தில் 40 சதவீதத்தை முதலீடு செய்வார்கள் என்றும் அதே சமயம் வைபவ் மட்டும் 20 சதவீத பங்களிப்பை அளித்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் கையெழுத்திடப்பட்டது. நிகர லாபத்தை அவர்களின் முதலீட்டு சதவீதத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொள்வது எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வைபவ் தனது பார்ட்னர்ஸ்களுக்கு தெரிவிக்காமல், அதே துறையில் செயல்படும் மற்றொரு நிறுவனத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இது அவர்களின் கூட்டு ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும். இதனால் அவர்களின் அசல் வணிகத்திற்கான லாபத்தில் சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் ₹3 கோடி இழப்பு ஏற்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.