ICC உலகக் கோப்பை 2023: இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆய்வு குழு
இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் மைதானங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது. 'ஈத்' விடுமுறைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கு பிறகு, பாதுகாப்புக் குழுவை இந்தியாவுக்கு எப்போது அனுப்புவது என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்று பாகிஸ்தானின் மாகாணங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு(விளையாட்டு) அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மார்க்யூட் போட்டிகள் நடைபெற இருக்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு இந்த குழு வருகை தரவுள்ளது.
அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது
"இந்தியாவிற்கு கிரிக்கெட் அணியை அனுபவதற்கு முன், அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதும், இந்தியாவிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்புவதும் வழக்கமாகும். போட்டிக்கு செல்லும் வீரர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து இந்த தூதுக்குழு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆய்வு செய்யும். இந்த ஆய்வில் ஏதாவது கவலைகள் இருந்தால் பிசிபி தனது அறிக்கையின் மூலம் அதை ஐசிசி மற்றும் பிசிசிஐயுடன் பகிர்ந்து கொள்ளும்." என்று பாகிஸ்தானின் மாகாணங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு(விளையாட்டு) அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற இருக்கிறது.