Page Loader
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2023
08:20 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், தேசிய ஆடவர் அணியின் தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளது. வஹாப் ரியாஸின் முதல் பணியாக ஆஸ்திரேலியாவில் டிசம்பரில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நியூசிலாந்திற்கு எதிராக ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு வீரர்களை தேர்வு செய்ய உள்ளார். முன்னதாக, சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு மத்தியில் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Wahab Riaz appointed as Chief Selector of Pakistan Cricket Team

தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து வஹாப் ரியாஸ் கருத்து

தேர்வுக்குழு தலைவராக தன்னை நியமனம் செய்தது குறித்து பேசியுள்ள 38 வயதான வஹாப் ரியாஸ், "தேர்வுக் குழுவுக்குத் தலைமை தாங்குவது சவாலான பணி. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வரவுள்ளோம். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு வழிவகுக்கும் ஒரு அணியை உருவாக்க நியூசிலாந்து டி20 தொடர் முக்கியமாக இருக்கும்." என்று ரியாஸ் கூறினார். முன்னதாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வை அறிவித்த ரியாஸ், பாகிஸ்தானுக்காக 27 டெஸ்ட், 91 ஒருநாள் மற்றும் 36 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 237 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.