இதே நாளில் அன்று : ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
1996 ஒருநாள் உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தானை இந்தியா மீண்டும் வீழ்த்திய தினம் இன்று. 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றபோதும் கூட, அதில் இந்தியாவை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1996 உலகக் கோப்பையில் இரு அணிகளும் மீண்டும் நேருக்கு நேர் மோதியபோது, இந்திய அணியை பழிதீர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்த போட்டியில் பெறும் வெற்றியானது இந்தியாவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை வெற்றியை பாகிஸ்தானுக்கு வழங்குவது மட்டுமல்லாமல், போட்டியின் அரையிறுதியில் தனது இடத்தையும் உறுதி செய்யும் ஒன்றாக இருந்தது.
சின்னச்சாமி ஸ்டேடியத்தில் சம்பவம் செய்த பெங்களூர் பாய்ஸ்
மார்ச் 9, 1996 அன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தான் இந்த போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் முகமது அசாருதீன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நவ்ஜோத் சிங் சித்துவின் 93 ரன்கள் மூலம் இந்தியா 50 ஓவரில் 287 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அமீர் சொஹைல் மற்றும் சயீத் அன்வர் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். எனினும் வெங்கடேஷ் பிரசாத் சோஹைலை வெளியேற்ற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரை சேர்ந்த அனில் கும்ப்ளே மற்றும் வெங்கடேஷ் பிரசாத் தலா 3 விக்கெட்டுகளுடன் இந்திய அணியை அரையிறுதிக்கு முன்னேற்றினர்.