இதே நாளில் அன்று : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா உலக கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற தினம்
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை நடந்த உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்ற தினம் இன்று. ஜூன் 25, 1983 அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா தனது முதல் ஐசிசி உலகக்கோப்பையை வென்றது. ஆனால் அப்போது இந்திய அணி குறித்த பார்வை வேறாக இருந்ததால், இது அதிர்ஷ்டத்தில் நடந்தது என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுனில் கவாஸ்கரின் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த அணிகளில் இந்தியா தான் என்பதை உலகுக்கு நிரூபித்தது.
உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
1985இல் ஆஸ்திரேலியாவில் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றை லீக் சுற்றில் வீழ்த்தியதோடு, அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மார்ச் 10, 1985 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா இரண்டாவது முறையாக பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 176/9 ரன்களை எடுத்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் 77 பந்துகளில் 67 ரன்களை விளாச, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரவி சாஸ்திரி 148 பந்துகளில் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.