INDvsAFG : டெல்லி அருண் ஜெட்லீ மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? கடந்த கால புள்ளி விபரங்கள்
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணியை புதன்கிழமை டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் எதிர்கொள்கிறது. முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 199 ரன்களுக்கு சுருட்டியதோடு, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலின் பேட்டிங் மூலம், அபார வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்கிடையே, போட்டி நடக்கும் டெல்லி அருண் ஜெட்லீ மைதானம் கடந்த காலங்களில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு கைகொடுத்ததா என்பதை இதில் பார்க்கலாம்.
அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்தியாவின் புள்ளி விபரங்கள்
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் இந்தியாவின் முதல் போட்டி 1982இல் நடந்தது. அதே நேரத்தில் சமீபத்திய போட்டி 2022இல் நடந்தது. இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை, இந்த மைதானத்தில் மூன்று போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. 1987 உலகக் கோப்பையில் இங்கு முதலில் விளையாடிய இந்தியா ஆஸ்திரேலியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதே நேரம், 1996இல் இலங்கையிடம் தோற்றது. 2011இல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.