டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆப்கான் வீரர் நிஜாத் மசூத் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆப்கான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிஜாத் மசூத், வங்கதேசத்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் அமீர் ஹம்சாவுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்த நிலையில், ஆப்கான் கிரிக்கெட் வீரர் மசூத் 16 ஓவர்கள் பந்து வீசி 79 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜூன் 14) நிஜாத் மசூத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது நாளின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 பேரை அவுட்டாக்கியதால், இரண்டாம் நாளில் முதல் பாதியிலேயே வங்கதேசம் 382 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
nijat masood record in test cricket
9 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்
நிஜாத் மசூத்தின் அபார புத்திசாலித்தனத்தால் வங்கதேச கிரிக்கெட் அணி ஒன்பது ரன்களுக்குள் கடைசி ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த டெஸ்டிற்கு முன்பு வரை 25 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 28.73 சராசரியில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் ஐந்துமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், ஆப்கான் வங்கதேச பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 236 ரன்கள் முன்னிலையுடன் பாலோ ஆன் கொடுக்காமல் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.