கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கிளப் போட்டிகளுக்கு இடையே நடக்கும் AFC சாம்பியன்ஸ் லீக் 2023/24 இன் குழுநிலையில் மும்பை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் அணியும், சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணியும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் அல் ஹிலால் அணியில் இடம் பெற்றுள்ள பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் இந்தியாவில் விளையாட உள்ளார்.
ஆசிய கிளப் அணிகள் மோதும் இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் ஒரே இந்திய அணியாக மும்பை சிட்டி எஃப்சி அணி உள்ளது.
மும்பை சிட்டி தனது அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் புனேவில் உள்ள பலேவாடி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது.
Neymar Jr will play in India
இந்தியாவுக்கு விளையாட வரும் முன்னணி வீரர்கள்
சவூதி புரோ லீக்கில் அல் ஹிலால் அணியில் நெய்மருடன், கலிடோ கவுலிபாலி, செர்ஜி மிலின்கோவிக்-சாவிக் மற்றும் ரூபன் நெவ்ஸ் போன்ற பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்த சீசனின் தொடக்கத்தில் அல் ஹிலால் அணியுடன் ஒப்பந்தம் செய்தனர்.
இதனால் இந்த வீரர்கள் அனைவரும் இந்தியாவுக்கு விளையாட வருவர் என்பதால், இந்திய கால்பந்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அல் ஹிலால் மற்றும் மும்பை சிட்டி எஃப்சியுடன், குரூப் டியில் உள்ள மற்ற இரண்டு அணிகள் உஸ்பெகிஸ்தானின் நவ்பஹோர் மற்றும் ஈரானின் எஃப்சி நசாஜி மசந்தரன் ஆகும்.
AFC சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 18 அன்று தொடங்க உள்ளது.