Page Loader
சவும்யா சர்க்கார் சதம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி
வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

சவும்யா சர்க்கார் சதம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 20, 2023
05:54 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசம் vs நியூசிலாந்து இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் புதன்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்க்கார் அபாரமாக விளையாடி 151 பந்துகளில் 169 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர் மற்றும் 22 பவுண்டரிகள் அடங்கும். சர்க்காரை தவிர முஷ்தபிசுர் ரஹீம் 45 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பியதால், 49.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

New Zealand beats Bangladesh by 7 wickets

நியூசிலாந்து அபார பேட்டிங்

292 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் மற்றும் ராச்சின் ரவீந்திரா நிலையான தொடக்கத்தை அமைத்தனர். ராச்சின் ரவீந்திரா 45 ரன்களில் அவுட்டானாலும், வில் யங் அரைசதம் கடந்து 89 ரன்கள் எடுத்தார். ஒன் டவுனாக களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்கள் குவித்தார். இதன் மூலம், 46.2 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.

Saumya Sarkar breaks record

சவும்யா சர்க்கார் சாதனை

வங்கதேசம் தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்க்கார் 169 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2020இல் லிட்டன் தாஸ் 176 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 158 ரன்களுடன் தமீம் இக்பால் இருந்த நிலையில், சர்க்கார் தற்போது அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் மூன்றாவது அதிக ரன் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் சர்க்கார் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (181*) மற்றும் ஸ்காட்லாந்தின் கலம் மேக்லியோட் (174) ஆகியோர் சர்க்காரை விட முன்னிலையில் உள்ளனர்.