ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்!
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டியு கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (மே 1) ஏசிசி ஆடவர் பிரிமியர் கோப்பையின் இறுதிப்போட்டியில் நேபாளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தோற்கடித்து ஆசிய கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. டாஸ் வென்று நேபாளம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 33.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய நேபாள அணியின் லலித் ராஜ்பன்ஸே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேபாள அணியின் குல்ஷன் குமார் ஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்ததன் மூலம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசியக் கோப்பை 2023க்கு நேபாள கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
இந்திய பாகிஸ்தான் குழுவில் இடம் பெற்றுள்ள நேபாளம்
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு குழுவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு குழுவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தற்போது நேபாளம் இணைந்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால், போட்டியை எப்படி நடத்துவது என்பதில் குளறுபடி நீடிக்கிறது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் நடுநிலை மைதானத்தில் நடத்தும் வகையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வந்தாலும், இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.