ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மீண்டும் தங்கம் வென்றார் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா
2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கிய நீரஜ் சோப்ராவின் ஓட்டம், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்கிறது. தடகள விளையாட்டுக்களில் தற்போது நடைபெற்று முடிந்த ஈட்டி எறிதல் போட்டியில், இறுதி வாய்ப்பில் 88.88 மீட்டர்கள் தொலைவில் ஈட்டியை ஏறிந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. தங்கம் மட்டுமின்றி ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாமிடத்தையும் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவைச் சேர்ந்த கிஷோர் குமார் ஜெனா, நீரஜ் சோப்ராவுடன் போட்டியிட்டு 87.54 மீட்டர்கள் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியாவிற்கு மற்றொரு தங்கம் மற்றும் வெள்ளி:
ஈட்டி எறிதல் மட்டுமின்றி, தடகள விளையாட்டுகளில் 4X400மீ தொடர் ஓட்டப் பந்தயத்திலும் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய ஆணி. ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேகப் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணியானது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல், பெண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வித்யா ரமேஷ், ஐஷ்வர்யா மிஸ்ரா, பிராச்சி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய பெண்கள் அணியானது இரண்டாவதாகப் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது.