Page Loader
பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு; காரணம் என்ன?
பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு

பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 08, 2024
12:33 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் எப்41 இல் இந்தியாவின் நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கம் வென்ற ஈரானின் சதக் பெய்ட் சையத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தங்கமாக உயர்த்தப்பட்டது. எப்41 வகை என்பது உயரம் குறைந்த விளையாட்டு வீரர்களுக்கானது. முன்னதாக, பெய்ட் சையத் 47.64மீ புதிய பாராலிம்பிக் சாதனை எறிதலுடன் தங்கம் வென்றார். அதே நேரத்தில் நவ்தீப் 47.32 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஈரானிய வீரர் உலக பாரா தடகள விதிகள் மற்றும் விதிமுறைகள் (நடத்தை விதிகள் மற்றும் நெறிமுறைகள்) விதி 8.1 ஐ மீறியதால் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சதக் பெய்ட் சையத்

சதக் பெய்ட் சையத் தகுதி நீக்கத்திற்கான காரணம்

சதக்கின் தகுதி நீக்கத்திற்கான விரிவான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் இரண்டு மஞ்சள் அட்டைகளை பெற்றார். போட்டியின் போது சிவப்பு நிறத்தில் அரபு வாசகத்துடன் கூடிய கருப்புக் கொடியை அவர் காட்டியது இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது தகுதி நீக்கத்திற்கு பிறகு, "உலக பாரா தடகள அமைப்பு பாரா தடகள விளையாட்டில் ஒருமைப்பாடு, நெறிமுறைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றின் உயர்ந்த தரத்தை பராமரிக்க உறுதிபூண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உட்பட விளையாட்டில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இந்த தரநிலைகளை நிலைநிறுத்தி, விளையாட்டு நியாயமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு உள்ளது." என அறிக்கை வெளியிட்டுள்ளது.