விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், செர்பிய மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதன் மூலம், இந்த தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து என வலம் வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பெயரிலிருந்து "பாண்டியா"வை நீக்கிவிட்டதையும், அவரது திருமணம் மற்றும் பிற முக்கியமான தருணங்களின் போது இருவரும் சேர்ந்தெடுத்த புகைப்படங்களையும் நீக்கியதை ரெடிட் பயனர் ஒருவர் கவனித்தபோது தான் இந்த விவாகரத்து ஊகங்கள் வைரலாக பரவின. ஐபிஎல் போட்டிகளில் நடாஷா பங்கேற்காததும் விவாகரத்து வதந்திகளை மேலும் தூண்டியது.
ஹர்திக் பாண்டியா- நடாஷா ஜோடியின் உறவு பற்றி ஒரு பார்வை
சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, ஹர்திக் பாண்டியா, ஜனவரி 2020இல் நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அந்த ஆண்டு மே மாதம் COVID-19 கொரோனா லாக்-டவுனின் போது இந்த ஜோடி ரகசியமாக திருமணம் செய்துகொண்டது. இதையடுத்து, அவர்கள் தங்கள் மகன் அகஸ்தியா-வை அந்த ஜூலை மாதம் வரவேற்றனர். பின்னர் மீண்டும் 2023ஆம் ஆண்டில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், உதய்பூரில் மூன்று நாட்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.