LOADING...
ஐபிஎல் 2026: வான்கடேவில் ரன் மழை! 14 ஆண்டுகால சாபத்தை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி
14 ஆண்டுகால சாபத்தை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2026: வான்கடேவில் ரன் மழை! 14 ஆண்டுகால சாபத்தை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2026
06:33 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி, கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தது. அந்த நீண்ட கால சாபத்தை தற்போதைய ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி உடைத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மும்பை அணி, தனது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன் சேஸிங் சாதனையைப் படைத்து அபார வெற்றி பெற்றது.

ருத்ரதாண்டவம்

ரோஹித் - ரிக்கெல்டன் ஜோடியின் ருத்ரதாண்டவம்

ஆரம்பத்தில் நிதானமாகத் தொடங்கிய மும்பை அணியின் ஆட்டம், பவர்பிளே ஓவர்களில் சூடுபிடித்தது. ரோஹித் ஷர்மா மற்றும் ரையன் ரிக்கெல்டன் ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு வெறும் 71 பந்துகளில் 148 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் இரண்டாவது சிறந்த தொடக்க பார்ட்னர்ஷிப் ஆகும். ரோஹித் ஷர்மா தனது ஐபிஎல் பயணத்தில் அதிவேகமாக 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

ரோஹித் ஷர்மா

சாதனை நாயகன் ரோஹித் ஷர்மா

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா (38 பந்துகளில் 78 ரன்கள்) பல புதிய மைல்கற்களை எட்டினார். ஐபிஎல் தொடரில் 50 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் (1,100+) குவித்த வீரர் என்ற சாதனையில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் முதலிடம் பிடித்தார்.

Advertisement

ஹர்திக் பாண்டியா

ரிக்கெல்டனின் அதிரடி மற்றும் ஹர்திக் பினிஷிங்

தென்னாப்பிரிக்க வீரர் ரையன் ரிக்கெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் (4 பவுண்டரி, 8 சிக்ஸர்) குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் ரன் அவுட் ஆன போதிலும், பின்னர் வந்த இம்பாக்ட் பிளேயர் சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் நிதானமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர். கொல்கத்தா அணியின் சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் சுழற்பந்து வீச்சு மும்பை பேட்டர்களிடம் எடுபடவில்லை.

Advertisement

பந்துவீச்சு

பந்துவீச்சில் ஜொலித்த ஷர்துல்

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைக் குவித்தது. அஜிங்க்ய ரஹானே (67) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (51) ஆகியோர் அதிரடி காட்டினர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா 240 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாக்கூர் தனது அபார பந்துவீச்சால் (3/39) கட்டுப்படுத்தினார். பின்னி ஆலன், கேமரூன் கிரீன் மற்றும் ரஹானே ஆகிய முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

வரலாறு

14 ஆண்டுகால தோல்வி முகம் மாறியது

கடைசியாக 2012 ஆம் ஆண்டு தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ், அதன்பிறகு ஒவ்வொரு சீசனிலும் முதல் போட்டியில் தோற்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தடையை உடைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும் கிடைக்காத இந்தத் தொடக்க வெற்றி, இந்த 2026 சீசனில் மும்பை அணிக்கு ஒரு நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement