மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ
விளையாட்டு வீரர்கள் அனைவரும் குறிப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட உடுப்புகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் போது அணிந்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் போது, அந்த எண்ணை வைத்தே இவர் இந்த வீரர் தான் என நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். சில எண் கொண்ட ஜெர்சிகள் வரலாற்றிலும் பதிவு செய்யப்படும். அந்தளவிற்கு அந்த விளையாட்டு வீரரின் பங்களிப்பு இருக்கும். அப்படிப்பட்ட எண்ணாக அறியப்படுவது முன்னாள் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் 7ம் எண் கொண்ட ஜெர்சி. மகேந்திர சிங் தோனயின் தலைமையின் கீழ் மூன்று கோப்பைகளை வென்றிருக்கிறது இந்திய அணி. இந்திய கிரிக்கெட்டிற்கு தோனியின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக ஒரு செயலை செய்திருக்கிறது இந்திய அணி.
விடைபெற்ற எண்.7:
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10 என்ற எண்ணை பிற வீரர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க, அந்த எண்ணிற்கு விடை கொடுத்தது பிசிசிஐ. தற்போது அதே போல, மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய 7 என்ற எண்ணுக்கும் விடை கொடுத்திருக்கிறது பிசிசிஐ. அதாவது இனி அந்த எண்ணை வேறு இந்திய கிரிக்கெட் வீரர்களால் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தனிப்பட்ட எண் ஒதுக்கப்பட்டிருக்கும். வீரர்கள் தங்களுக்குப் பிடித்த எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு வீரர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயன்படுத்திய எண் பிறர் வீரர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், இந்த 10 மற்றும் 7 ஆகிய எண்கள் விடைபெற்றுவிட்டதால், அதனை பிற வீரர்களால் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.