ஒவ்வொரு முறையும் இடதுபக்கம் வானத்தை நோக்கி பார்ப்பது இதற்குத்தான்.. எம்எஸ் தோனி விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரருமான எம்எஸ் தோனி, தான் ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது ஏன் இடதுபக்கமாக வானத்தைப் பார்ப்பது ஏன் என விளக்கியுள்ளார். இந்த கேள்வி நீண்டகாலமாக பலரிடமும் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரிடம் நேரடியாகவே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இவ்வாறு செய்வதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என்றும், மைதானத்திற்குள் கால் வைக்கும்போது முதலில் எந்த காலை வைப்பது என்று தோன்றும், அப்போது பெரும்பாலும் வானத்தில் இடதுபக்கத்தில் சூரியன் இருக்கும் என்பதால், அதை பார்ப்பதாகக் கூறினார். பின்னர் இதுவே வழக்கமாக மாறி விட்டதாகவும் கூறினார்.
மனைவியை பார்ப்பதற்காகவும் இடதுபக்கம் பார்ப்பதாகக் கூறிய எம்எஸ் தோனி
பொதுவாகவே தான் இடதுபக்கம் அதிகம் பார்க்கும் பழக்கம் கொண்டவர் எனவும், மைதானத்தில் விளையாட செல்லும்போது ஸ்டேடியத்தில் மனைவி இடதுபக்கம் இருப்பார் என்றும், அதனால் அவரை பார்ப்பதற்காகவும் இடதுபக்கம் திரும்புவேன் என்றும் கூறினார். மனைவியின் அனுமதியை கேட்காமல் சென்றால், அது வீட்டில் சிக்கலை உருவாக்கும் எனக் கூறி சிரிப்பலையை உருவாக்கினார். இதற்கிடையே, ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அவரை அன்கேப்ட் வீரராக விளையாட வைக்கும் முயற்சியிலும் சிஎஸ்கே ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏலத்திற்கு செல்வதாக இருந்தால், தோனி விளையாடுவது சந்தேகமே என சிஎஸ்கே வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.