
ஐபிஎல்லில் மீண்டும் கேப்டன்; இரண்டு புதிய சாதனைகளை படைத்தார் எம்எஸ் தோனி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 சீசனில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) சேப்பாக்கத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்கி உள்ளார்.
முன்னதாக, முழங்கையில் ஏற்பட்ட மயிரிழை எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் தொடரிலிருந்து விலகிய நிலையில்ம் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஏற்கனவே ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற கேப்டனான தோனி, சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றதன் மூலம் ஐபிஎல்லில் இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
கேப்டன்
அன்கேப்ட் பிளேயர் கேப்டனாவது முதல்முறை
500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க வீரராக இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய விதியின் காரணமாக எம்எஸ் தோனி இப்போது அன்கேப்ட் வீரராக கருதப்படுகிறார்.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஐபிஎல் அணியை வழிநடத்தும் முதல் அன்கேப்ட் வீரர் என்ற பெருமையை தற்போது எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.
கூடுதலாக, 43 வயதில், ஐபிஎல்லில் ஒரு அணியை வழிநடத்திய மிக வயதான கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
முன்னதாக, ஐபிஎல் 2023 இல் 41 வயது 325 நாட்களில் சிஎஸ்கேவை வழிநடத்தியதன் மூலம் அவர் படைத்த சொந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.