LOADING...
IPL 2026: 'தலைவன்' வர்றார்! சிஎஸ்கே-வை மீட்க களமிறக்கும் தோனி?
எம்.எஸ். தோனியின் வருகை குறித்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது

IPL 2026: 'தலைவன்' வர்றார்! சிஎஸ்கே-வை மீட்க களமிறக்கும் தோனி?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2026
05:35 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 பருவத்தின் தொடக்கத்திலேயே தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு, அதன் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் வருகை குறித்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நடப்புத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே, தனது கேப்டன் மற்றும் வழிகாட்டியின் வருகைக்காகக் காத்திருக்கிறது. கால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத 44 வயதான தோனி, தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகிறார். வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே

தடுமாறும் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே

அடுத்த 2-3 நாட்களில் தோனிக்கு நடத்தப்படும் உடற்தகுதித் தேர்வில் (Fitness Test) அவர் தேறும்பட்சத்தில், பிளேயிங் லெவனில் அவரது இடம் உறுதி செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோனி இல்லாத சிஎஸ்கே அணி, களத்தில் தனது பழைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 250 ரன்களை வாரி வழங்கிய சென்னை அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் இதுவரை 41 ரன்கள் மட்டுமே எடுத்துப் தடுமாறி வருவதுடன், அவரது கேப்டன்சி முடிவுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து மாற்றப்பட்ட சஞ்சு சாம்சனும் இதுவரை எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

Advertisement