ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்த இந்திய வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி புதிய உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக ஆனார். சிராஜ் இதற்கு முன்னர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாகத் திகழ்ந்ததன் மூலம், தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்தார். தற்போது 694 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முகமது சிராஜ் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஜோஷ் ஹேசில்வுட்டைவிட 16 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்தியாவின் குல்தீப் யாதவ் 638 ரேட்டிங் புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஷுப்மன் கில் இரண்டாம் இடம்
ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், அதில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 151 ரன்கள் குவித்ததுதான் முதலிடத்தை தக்கவைத்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் ஷுப்மன் கில் மொத்தம் 814 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஆசிய கோப்பையில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்திருந்தார். விராட் கோலி எட்டாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தில் உள்ளார்.