உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பந்த் சாதனையை முறியடித்தார் முகமது ரிஸ்வான்
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து அபாரமாக விளையாடியது. ஃபார்மில் உள்ள சவுத் ஷகீல் ஒரு அற்புதமான சதத்தைப் பதிவு செய்தார் மற்றும் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 171 ரன்களைக் குவித்தார். மேலும், அவர் இந்த சதம் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் நம்பர் 6 இடத்தில் களமிறங்கி அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை வைத்திருந்த ரிஷப் பந்தை பின்னுக்குத் தள்ளினார். ரிஷப் பந்த் 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக 146 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், அதை முகமது ரிஸ்வான் முறியடுத்துள்ளார்.
முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கிய வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இரண்டாம் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 446 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. சவுத் ஷகீல் 141 ரன்களும், முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 171 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் சிறப்பான பந்துவீசிய ஷரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களுடனும் ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.