Loading...
சாண்ட்பேப்பர்கேட் சர்ச்சை: உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு மிட்செல் ஸ்டார்க் மறுப்பு
பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு மிட்செல் ஸ்டார்க் மறுப்பு.

சாண்ட்பேப்பர்கேட் சர்ச்சை: உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு மிட்செல் ஸ்டார்க் மறுப்பு

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2018 கேப் டவுன் டெஸ்டில் அரங்கேறிய பந்து சேதப்படுத்திய (Sandpapergate) விவகாரம் குறித்து உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் முன்வைத்துள்ள புதிய குற்றச்சாட்டுகளை, ஆஸ்திரேலிய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மறுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் இந்த விவகாரம் முன்கூட்டியே தெரியும் என கவாஜா தனது சுயசரிதை நூலில் கூறியிருந்த நிலையில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருந்து முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேசியுள்ள ஸ்டார்க், 2021-ஆம் ஆண்டு தாமும் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் நிலைப்பாட்டிலேயே இப்போதும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஸ்டார்க் விளக்கம்

திரையில் பார்த்தே அறிந்தேன்

மைதானத்திற்குள் பந்தை சேதப்படுத்துவதற்காக ஏதேனும் வெளிப்பொருள் கொண்டு செல்லப்பட்டது தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று குறிப்பிட்ட ஸ்டார்க், மைதானத்தின் பெரிய திரையில் கேமரூன் பான்கிராஃப்ட் சாண்ட்பேப்பரை மறைக்கும் காட்சிகள் வெளியான பிறகே தங்களுக்கு விஷயம் தெரியவந்ததாகக் கூறினார்.

கவாஜா தனது புத்தகத்தில் என்ன எழுதியுள்ளார் என்பதைப் படித்துப் பார்க்கவில்லை என்றும், அதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய ஸ்டார்க், கவாஜாவுடன் மீண்டும் பேசுவது அவரது சொந்த முடிவை பொறுத்தது எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

முன்னதாக நடுவர்கள் நைஜல் லாங் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் பந்தை ஆய்வு செய்தபோது எவ்வித பாதிப்பையும் காணவில்லை என்பதையும் பந்துவீச்சாளர்கள் தரப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

அமைதி காக்க வேண்டும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள்

இந்த சர்ச்சை மீண்டும் வெடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ACA) வீரர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் ஏற்கனவே தங்களது செயல்களுக்கு மிகக் கடுமையான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விலையை கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட சங்கத்தின் தலைமை நிர்வாகி பால் மார்ஷ், இதில் வெற்றியாளர்கள் எவருமில்லை என்றும், சம்பந்தப்பட்ட வீரர்களை நோக்கித் தொடரும் கடுமையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புதிய டெஸ்ட் சீசன் தொடங்குவதற்கு முன்பாக எழுந்துள்ள இந்த விவாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT