செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான்
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தாவுக்கு எதிராக விளையாடும் மேக்னஸ் கார்ல்சன் உணவு சேராததால் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அரையிறுதிப் போட்டியில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற பிறகு உட்கொண்ட உணவு ஒத்துக்கொள்ளாததால், இறுதிப்போட்டிக்கு சரியாக தயாராகவில்லை எனக் கூறப்படுகிறது. இது பிரக்ஞானந்தாவுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பைக் கொடுத்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் 35 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் பிரக்ஞானந்தாவை டிரா செய்தார். இதையடுத்து புதன்கிழமை இருவரும் மீண்டும் மோத உள்ளார். இதுவும் டிராவில் முடிந்தால், வியாழக்கிழமை நடக்கும் டை பிரேக்கர் நடத்தப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
பிரக்ஞானந்தாவை பாராட்டிய மேக்னஸ் கார்ல்சன்
முதல் சுற்று ஆட்டத்திற்கு பிறகு FIDE யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "பொதுவாக, நேற்று ஒரு கடினமான டைபிரேக் விளையாட வேண்டியிருக்கும் நிலையில், ஒரு நாள் ஓய்வு எடுத்தால் எனக்கு ஒரு நன்மை இருந்திருக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் கடினமான நிலையில் இருந்தேன். எனக்கு உணவு கோளாறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக என்னால் சாப்பிட முடியவில்லை. நான் மிகவும் அமைதியாக இருந்தேன். தொடக்கத்தில் நான் சிக்கலைத் தீர்த்த விதத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முடிவு நன்றாக உள்ளது." என்று கூறினார். மேலும், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறந்த தொடக்கத்தை அமைத்ததால், ஆரம்பத்தில் தான் விளையாட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறினார்.