ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் : வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சாதனை
திங்கள்கிழமை (மார்ச் 20) சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தனது எட்டாவது ஒருநாள் அரைசதத்தை விளாசினார். லிட்டன் தாஸ் 71 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் எனும் மைல்கல்லை கடந்தார். இதற்கிடையே முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 100 ரன்களும் நஜ்முல் ஷாண்டோ 73 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உச்சத்திற்கு கொண்டு சென்றனர். மழை பெய்வதால், அயர்லாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
லிட்டன் தாஸ் ஒருநாள் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
லிட்டன் தனது அரைசதம் மூலம் 2,000 ரன்களைக் கடந்து, இந்த சாதனையை எட்டிய ஒன்பதாவது வங்கதேச வீரர் ஆனார். தற்போது விளையாடி வரும் வங்கதேச வீரர்களில், தமிம், ஷாகிப் அல் ஹசன், மற்றும் முஷ்பிகுர் ஆகியோர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் லிட்டன் தாஸை விட அதிக ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளனர். லிட்டன் தாஸ் 33.58 சராசரியில் 2,015 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் அடங்கும். இதற்கிடையே லிட்டன் 1,058 ரன்களுடன் தனது 34வது ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் 1,000 ரன்களைக் கடந்தார்.